ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

ஹஜ்




ஹஜ்ஜை முடித்தநல் ஹாஜீரே அச்சம் இறையுடன் கொண்டோரே இச்சை துறந்திடும் பண்பீரே பச்சைக் குழந்தையாய் ஆனீரே!
மஹ்ஷர் நினைவினில் கூட்டத்தில் அஹ்மத் நபிகளும் காண்பித்த இஹ்ராம் உடையுடன் ஓட்டத்தில் இஹ்சான் உணர்வுடன் சென்றீரே!
கண்ணீர் வடித்ததால் பாவங்கள் தண்ணீர் கழுவிய தோற்றத்தில் எண்ணம் முழுவதும் உள்ளத்தில் வெண்மை மொழுகிடச் செய்தீரே!
வண்ணம், இனங்களும் வேறாகி வெண்மை உடுத்திய தோற்றத்தில் எண்ணம் , நினைவுகள் ஒன்றாகி கண்ணில் நிறுத்திய கஃபாவில்
சுற்றி வருவதும் குர்பானி(யால்) பற்றை அறுப்பதும் செய்தீரே கற்றுத் தெளிந்ததும் ஈமானில் சற்றும் விலகிடாச் சான்றோராய்!
கோபம் குறைகளை மன்னித்து பாபச் சுமைகளை நிந்தித்து தீபச் சுடரெனத் தீன்ஏந்தி சாபம் களைந்திடச் செய்தீரே!
பல்லா யிரமெனப் பாரோரும் கல்லால் எறிந்ததேன் ஷைத்தானை உல்லா சமாகவே இல்லாமல் அல்லாஹ் விதித்தநல் லாணைக்கே!
வற்றாக் கிணறென ஜம்ஜம்நீர் முற்றும் குடித்தநல் ஹாஜீரே! இற்றைப் பொழுதினில் இன்பம்தான் சுற்றம் சுகம்பெறத் தந்தீரே!
மங்காச் சுடரென மக்காவில் பொங்கும் அருளொளி ஈமானை எங்கள் இடத்தினில் ஏற்றீரே தங்க மனத்துடன் வாரீரே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக